அட்லாண்டா,ஜூன்.25; உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விறுவிறுப்பான லீக் சுற்றும் ஆட்டத்தில் மொராக்கோ அணி 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் ஹைதி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மொராக்கோ அணி நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
அமெரிக்காவின் அட்லாண்டா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (ஜூன் 25, வியாழன்) அதிகாலை நடைபெற்ற குரூப் ‘சி’ (Group C) பிரிவின் விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில், மொராக்கோ- ஹைதி அணிகள் மோதின.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் கடைசி நிமிடம் வரை ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின.
ஹைதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கம்
போட்டி தொடங்கிய 10ஆவது நிமிடத்திலேயே ஹைதி அணி ஆட்டத்தின் முதல் கோலை அடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஹைதி வீரர் லென்னி ஜோசப் பேக்ஹீல் (backheel) முறையில் உதைத்த பந்து, மொராக்கோ கோல்கீப்பர் யாசின் போனோவின் மீது பட்டு சுயகோலாக (Own Goal) மாறியது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஹைதி அடித்த முதல் கோல் இதுவாகும். மேலும், கடந்த 52 ஆண்டுகளில் உலகக் கோப்பை அரங்கில் ஹைதி பதிவு செய்த முதல் கோல் இது என்பதால் மைதானத்தில் இருந்த அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
அதிரடி காட்டிய அஷ்ரஃப் ஹக்கிமி
ஹைத்தியின் இந்த அதிரடித் தொடக்கம் மொராக்கோ அணியை உஷார்படுத்தியது. தொடர் தாக்குதல்களைத் தொடுத்த மொராக்கோ அணிக்கு 39ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அணியின் நட்சத்திர விங்கர் அஷ்ரஃப் ஹக்கிமி ஒரு அபாரமான கோலடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். ஆனால், ஹைதி அணி இதோடு சோர்ந்துவிடவில்லை.
அடுத்த சில நிமிடங்களிலேயே (43-வது நிமிடம்) ஹைதியின் வில்சன் இசிடோர் மிக நீண்ட தூரத்திலிருந்து ஒரு அசாத்தியமான கோலை அடித்து, மீண்டும் தனது அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார். இசிடோரின் இந்த கோல் இந்தத் தொடரின் சிறந்த கோல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+1′ நிமிடம்), ஹக்கிமியின் அசிஸ்ட்டைப் பயன்படுத்தி இஸ்மாயில் சைபாரி மொராக்கோவிற்காக இரண்டாவது கோலை அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆட்டத்தின் போக்கை மாற்றிய மாற்று ஆட்டக்காரர்கள்
இரண்டாம் பாதியில் மொராக்கோ அணியின் பயிற்சியாளர் முகமது வஹ்பி சில முக்கிய வியூக மாற்றங்களைச் செய்தார். மாற்று ஆட்டக்காரர்களாக களம் புகுந்த சூஃபியான் ரஹிமி மற்றும் ஜெசிம் யாசின் ஆகிய இருவரும் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அமைத்தனர். ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில் கார்னர் கிக் மூலம் கிடைத்த பந்தைக் கட்டுப்படுத்தி, சூஃபியான் ரஹிமி அடித்த ஷாட் ஹைதி தடுப்பாட்டக்கார்கள் மீது பட்டு கோலாக மாறியது. இதன் மூலம் மொராக்கோ ஆட்டத்தில் முதன்முறையாக 3-2 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் (89-வது நிமிடம்) ரஹிமியின் துல்லியமான கிராஸை மிக அழகாக கோலாக மாற்றினார் மற்றொரு இளம் மாற்று வீரரான ஜெசிம் யாசின். இதன் மூலம் மொராக்கோ 4-2 என்ற கணக்கில் திரில் வெற்றியை உறுதி செய்தது.
கால்பந்து ரசிகர்களின் மனங்களை வென்ற ஹைதி அணி
இந்த தற்காப்பு மற்றும் அதிரடி நிறைந்த வெற்றியின் மூலம் மொராக்கோ அணி குரூப் சி பிரிவில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு (Round of 32) முன்னேறியுள்ளது. வரும் 29ஆம் தேதியன்று மான்டேரியில் நடைபெறவுள்ள நாக்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி, குரூப் எஃப் பிரிவின் வெற்றியாளரை எதிர்கொள்ள உள்ளது.
உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஹைதி அணி வெளியேறினாலும், 52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் இரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோல்களை அடித்து சர்வதேச கால்பந்து ரசிகர்களின் மனங்களை வென்று தலைநிமிர்ந்து வெளியேறியுள்ளது.
